Friday 2 November 2018

Janu revealing her love to Ram | Untold Story from 96 movie | Gurubaai Streams

96 படம் எல்லோரும் பார்த்திருப்பீங்கள். திரிஷா விஜய் சேதுபதியின் நடிப்பில் ப்ரேம் இயக்கத்தில் வந்த திரைப்படம். அதில் இறுதியில் திரிஷா சிங்கப்பூருக்கு சென்றுவிடுவார்.

திரிஷா சிங்கப்பூர் சென்றவுடன் விஜய் சேதுபதியிடம் பேசியிருந்தால் என்ன பேசியிருப்பார் என்பதை வீடியோ பதிவாக செய்திருக்கிறேன்.

வீடியோ லின்க்:

https://youtu.be/j65_Lw4HvFQ

Wednesday 8 August 2018

உடன்பிறப்பே

உடன்பிறப்பே!

"தம்பி!"

"எதிர்பார்த்துக் காத்திருந்தீர்களா அண்ணா?"

"பின் இல்லையா? என் இதயத்தை உன்னிடம் அல்லவா கொடுத்துவிட்டு வந்திருந்தேன்? (சிரித்துக்கொண்டே)"

"அதைக்கொண்டு வர நான் பட்ட பாட்டையும் பார்த்திருப்பீர்கள்தானே அண்ணா?"

"நிச்சயமாக. நீ பிறவிப்போராளியடா. இந்தக் கொடுங்கோலர்களிடம் நான் இதை எதிர்பார்த்ததுதான் கருணா!"

"ஆனால் இந்த மக்களுக்கு நம் நாட்டின் எதிரி யார் என்பதை விளங்கிக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது அண்ணா."

"காலம் உணர்த்தும் கருணா. நீ கவலைகொள்ளாதே. திராவிடம் நிலைத்து நிற்கும்வரை எதிரிகளை மக்கள் உணர்ந்துகொண்டுதான் இருப்பார்கள்!"

"நீங்கள் விட்டுப்போன வேலையை சரியாகச் செய்திருப்பதாய் ஒரு சிறிய திருப்தி இருக்கிறது அண்ணா. அது போதும்."

"என் ஆயுளுக்கும் சேர்த்தல்லவா நீ செய்திருக்கிறாய்! என் தம்பியாய் அல்ல. என் மகனாக உன்னை நினைத்துப் பார்க்கிறேன் கருணா!"

"நன்றி அண்ணா. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதுதான் என் கவலை!"

"அந்தக் கவலையும் உனக்கு வேண்டாம். நம் பிள்ளைகளின் நெருப்பு எனக்குத் தெரியும். அது நான் உனக்குக் கொடுத்து வந்தது. நீ அவர்களுக்குக் கொடுத்து வந்தது. அது வெறும் நெருப்பு இல்லை கருணா. சூரியன். அணைக்க முடியாது!"

"நன்றி அண்ணா! உங்களை அப்பா என்று அழைத்துக்கொள்ளட்டுமா?"

- பாலகுருநாதன் முருகேசன்

Tuesday 29 May 2018

பாப்பா பரிதாபங்கள்

பாப்பா பரிதாபங்கள்!

"என்னாச்சு மாமா?"
"தல வலி பாப்பா!"
"ஹ்ம். ரெஸ்ட் எடு!"

(Phone cut & again phone ringing)

"சார். உங்க லொக்கேஷன்ல தான் இருக்கோம்"
"என்னது? யார் நீங்க?"
"Zomato சார். உங்களுக்கு பார்சல் வந்துருக்கு!"

(Phone cut & again phone ringing)

"ஷப்பா. அசத்துறியே பாப்பா!"
"எப்டி இருக்கு?"
"ப்ளாக் காஃபி செம்ம!"
"அடேய் மாமா. அது க்ரீன் டீ!"

🖤

Thursday 24 May 2018

நாளை நாமாகவும் இருக்கலாம்!

கடைசியாக இப்படி இருந்தது நீட் தேர்வின் பொழுது மாணவர் ஒருவரின் அப்பா மரணமடைந்தபொழுது. அது யதேட்சையான சம்பவமாகவும் இருப்பதற்கான நிகழ்தகவுகள் அதிகம்தான். இருந்தாலும் அதற்குப் பின்னான சில நாட்களை எளிதாகக் கடக்கமுடியவில்லை.

இப்பொழுதும் அதே போலத்தான். எளிதாகக் கடக்க முடியாத ஒரு வலியைச் சுமந்துகொண்டே இயல்பான நாட்களைக் கடக்கவேண்டியதுள்ளது. நம்மால் எதுவும் செய்யமுடியவில்லை என்கின்ற ஒரு கையறுநிலை. மீதமிருக்கும் வருடங்களில் பணத்தை மட்டும் கொள்ளையடித்துவிட்டுப் போய்விடுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்க இங்கு நடந்தேறியிருப்பது இன அழிவின் தொடக்கம்.

இதை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்காக யாரும் சாப்பிடாமல் இல்லை, தூங்காமல் இல்லை. ஆனால் இயல்பாய் இருக்க முடிவதில்லை. வலியின் வெளிப்பாடு. யாரையும் ஐபிஎல் பார்க்காதீர்கள் என்று சொல்லவரவில்லை, யாரையும் சினிமா பார்க்காதீர்கள் என்று சொல்லவரவில்லை. அவரவர் கேளிக்கை அவரவருக்கு. ஆனால் இயல்பற்று இருப்பவர்களைக் சார்க்கசப் புடுங்கிகளாகக் கலாய்ப்பவர்களை நான் மனிதத்தை இழந்த ஈனப்பிறவிகளாகவே பார்க்கிறேன். அவர்களின் மதிப்பு அவ்வளவுதான். எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறதென்று எண்ணிக் கடக்கிறேன். தோழர் ஷாலினின் பதிவு மட்டும் கண்முன் வந்துசெல்கிறது!

"நாளை நாமாகவும் இருக்கலாம்!"

Monday 9 October 2017

Ball is in our court - ஹரஹர மஹாதேவகி

பால் இஸ் இன்..
________

ஹரஹர மஹாதேவகி பற்றி நான் பதிவிடவே இல்லையோ?
.
நான் போன வாரம் சென்னை சென்றிருந்தேன். முதன்முறையாக Palazzo தியேட்டருக்குச் சென்றிருந்தேன். தியேட்டரைப் பார்த்து பிரம்மித்துப் போய்விட்டேன். ஷங்கரின் பாடல்களுக்கு செட் போடுவதைப் போன்ற அமைப்பில் அசத்தியது. அங்குதான் ஹரஹர மஹாதேவகி பார்த்தேன்.தியேட்டர் 4 மணிக்காட்சியில் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தது. இருந்த நபர்களில் 60% க்கும் மேல் பெண்கள். ஒவ்வொரு இரட்டை அர்த்த வசனங்களுக்கும் நான் (அதாவது ஒரு ஆண்) எளிதில் புரிந்துகொண்டு சிரிப்பதை விட அவர்கள் வேகமாக இருக்கிறார்கள். பாம்பு சீங்களுக்கு எல்லாம் என் பக்கத்தில் இருந்தவள் கெக்களித்துக் கொண்டே இருந்தாள். படம் முடியும்வரை தியேட்டரில் சிரிப்பலைகள் கேட்டுக்கொண்டேதான் இருந்தது.
.
அடுத்து இந்த இயக்குனர் இதே டீமுடன் 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' என்ற படத்தை எடுக்கப் போகிறார். அதையும் அதிரிபுதிரியாக ஹிட்டடிக்க மக்கள் தங்கள் ஆதரவுக் கரங்களுடன் காத்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இதில் இரண்டு கோணங்களில் பார்க்க நினைக்கிறேன். அந்த இயக்குனர் சொல்வது "நான் பிட்டுப் படம் எடுக்கவில்லை. சாதாரணமாக நண்பர்கள் எப்படி A ஜோக் அடித்துக் கொள்வார்களோ அதைப் படமாக்கி இருக்கிறேன்" என்கிறார். ஆம். அவர் வக்கிரமான சீன்களைப் படத்தில் வைக்கவில்லை. வேலு பிரபாகரன் போல அப்பட்டமான B grade காட்சிகளின் மூலம்தான் மக்களின் currupt செய்ய முடியும் என்பதில்லை. இதுபோன்ற A ஜோக்ஸ் கள் கூடிய திரைப்படங்கள் இன்னமும் வலுவாகவே செய்யும்.
.
அடுத்த ஒன்று. வேலுபிரபாகரன் கதைக் களங்களும் அதற்கு அவர் சொல்லும் விளக்கங்களும் பார்த்தால் நியாயமாக உண்மை இருப்பதாகத் தோன்றும். எல்லாவற்றையும் மூடி வைத்து வைத்துத்தான், அதற்கு புனித பிம்பம் உருவாக்கி வைத்திருக்கிறோம் நாம். அதற்கு கற்பென்று ஒரு முட்டாப்புதினாவாக ஒரு பெயரையும் வைத்திருக்கிறோம். மக்களிடம் பொதுப்பார்வைக்கு வரும் செக்ஸ் சம்மந்தமான பேச்சுக்களும் காமெடி வகையறாக்களும் மக்களின் மனதை corrupt செய்யுமா இல்லை சீராக்குமா என்ற குழப்பம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இப்பொழுதெல்லாம் மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி அவசியம் என்பதைப் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.
.
இவர்கள் எல்லாம் சொல்லும் இன்னொரு விஷயம் "நீங்க நல்ல படத்தை ஓட வைங்க, அப்பறம் நாங்களும் அந்த மாதிரி நல்ல படம் எடுக்குறோம்."
.
ஆம். நாம் தமிழ் சினிமாவைக் குட்டிச்சுவர் ஆக்குகிறார்கள் என்று இவர்களைச் சொல்லிவிட்டு புதிய முயற்சிகளை எல்லாம் எங்கே பேசி ஓட வைக்கிறோம். தியேட்டரில் இருந்துத் தூக்கியவுடன் டொரண்ட்டில் பார்த்துவிட்டு உறியடியை சிலாகிக்கிறோம். நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.
Ball is in our court only. (இது இரட்டை அர்த்த வசனம் இல்லை)
____
-பாலகுருநாதன்

Wednesday 27 September 2017

இளையராஜா - Smule - Copyrights issue

இளையராஜா - Smule - Copy Rights issue
________
ஒரு விஷயம் இந்த மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. காப்பி ரைட்ஸ் கேட்கும் மனப்பான்மையைப் பிச்சைக்கார மனப்பான்மையாகவும், ஏதோ இரவல் கேட்டு ஏந்திக்கொண்டு நிற்பதைப் போன்றும் இகழ்கிறார்கள். இளையராஜா எதோ அடுத்தவன் காசைப் பிடிங்கிக் கொள்ளப் பார்ப்பதாகச் சித்தரிக்கிறார்கள். இன்னும் சிலர் கீழிறங்கி "பாத்ரூம்ல சத்தமா பாடாத. இளையராஜா காசு கேப்பாரு" என்கிற ரேஞ்சில் மீம்கள்.
.
எளிமையான ஒரு விஷயம் மக்களுக்குப் புரிவதே இல்லை. எளிமை என்றால் எளிமையினும் எளிமை. என்னவென்றால்,
எந்த ஒரு படைப்பும் அந்தப் படைப்பு உயிர்ப்புடன் இருக்கும் காலம் வரை உரிய படைப்பாளிக்கே சொந்தம். இது உலக நியதி.
அந்தப் படைப்பு மறுபதிப்பு செய்யப்படும்பொழுது படைப்பாளிக்கு உரிய தொகையைக் கொடுப்பதுதான் தர்மம். ஒரு புத்தகம் எத்தனை பதிப்புக்கள் அச்சாகும்போதும் எழுதியவருக்குக் கிடைக்கும் பங்கினைப் போல.
.
இப்பொழுது இளையராஜாவுக்கு வாருங்கள். இளையராஜா தன் பாடல்களை ஒரு படத்திற்காக அல்லது இசை ஆல்பத்திற்காகக் காசு வாங்கிக் கொண்டு இசையமைத்துக் கொடுக்கிறார். அது ஒரு படைப்பு. அதன் உரிமை அவருடையது. அல்லது அதன் ஒரு பங்கு அவருடையது. அது வாழும்காலம் வரை நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கப் போகிறோம். எந்த ஒரு ஊதியம், பணம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் இல்லாமல் அதை நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். அதற்குத் தடைகள் இல்லை!
.
இப்பொழுது எஸ்.பி.பி ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார். அதன் மூலம் அவர் மக்களை சந்தோஷமாக மட்டும் வைத்திருக்கப் போவதில்லை. அப்படி இருந்தால் இந்தப் பிரச்சனை எழப்போவதில்லை. படைப்பாளி காசு கேட்கப் போவதில்லை  ஆனால் அதன்மூலம் அவர் கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார். இங்குதான் பிரச்சனை எழுகிறது. இதனால் இளையராஜா அவருக்கு சேர சேண்டிய பங்கினைக் கேட்க வேண்டியதாகிறது.
.
Smule app உலகம் முழுக்க எல்லோராலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஒரு செயலி. அவர்கள் மற்றவர்கள் இலவசமாகப் பாடிமகிழ இதை மக்களுக்குக் கொடுக்கவில்லை. வருடத்திற்கு இத்தனை என அதுவும் கோடிகளில் நிகழும் business.
மற்ற இசையமைப்பாளர்களுக்கும், ஆங்கில, வெஸ்டர்ன் இசையமைப்பாளர்கள் எல்லாம் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இளையராஜா இப்பொழுதுதான் கேட்க ஆரம்பித்திருக்கிறார். நியாயமாகத் தனக்குச் சேர வேண்டியதை.!
.
மக்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் நியாத்தின் முன் நில்லுங்கள். இளையராஜா மக்களின் சந்தோஷத்தில் தலையிடுகிறார் என்று நினைத்தால் அது உங்கள் முட்டாள்தனம் அன்றி வேறில்லை. அவர் எப்பொழுதும் நம் சந்தோஷத்தில் தலையிடுவதில்லை. அவர் இப்படி எல்லாம் செய்வதன்மூலம் அடுத்த தலைமுறைக்கு அவர் இசையைக் கொண்டுசெல்ல முடியாது என்று சொல்கிறார்கள். சிரிப்புதான் வருகிறது. அவர் அதையெல்லாம் தாண்டிப் போய்விட்டார். அத்ற்கான access நம்மிடம் இருக்கிறது. இளையராஜாவின் பாடல்களை என் பேரனின் பேரன் தன் ipad இல் கேட்டு சிலாகிப்பான். யார் இப்தக் கிழவன் என அழுது அங்கலாய்ப்பான். அதெல்லாம் பார்க்க நாம்தான் இருக்க மாட்டோம் :)

Thursday 13 July 2017

பார்ப்பான்

பார்ப்பான்

எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்தது என் கல்லூரிக்காலத்தில் இருந்துதான் என்று சொல்லுவேன். வெளிப்படையான மனப்போக்கு வந்த காலங்கள். ஆனால் சாதி பற்றிய விழிப்புணர்வு வர ஆரம்பித்தது இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்புதான். ரொம்பவும் தாமதம் இதெல்லாம்.

அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருப்பது பூவராக மூர்த்தி. கல்லூரி நண்பர். எப்படி வெளிப்படையாக இருக்க வேண்டும், அடுத்தவர்களிடம் பழக வேண்டும் என நிறைய அவரிடம் கற்றிருக்கிறேன். ரம்யா முரளி என் பேபி. என் மேல் அவள் கொள்ளும் அக்கறையும் காதலும் எல்லோருக்கும் நான் சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதே போல சத்குரு மற்றும் சிலர்.  இப்படி நிறைய நண்பர்கள் பிராமண சமூகத்தில் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். இப்பொழுதும். யாரும் தான் யார் என மார்தட்டிக்கொண்டதில்லை. அடுத்தவர்களிடம் தரக்குறைவாக நடந்ததில்லை. இவர்களிடம் நான் பார்த்தது எல்லாமே சக மனிதர்களிடம் அன்பு செய்வது. எல்லோரையும் சமமாகப் பார்ப்பது. இப்படித்தான் எல்லோரும் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். எல்லா சமூக்கத்திலும்.

எஸ்.வி.சேகர் போன்ற சிலர் செய்யும் சேட்டைகளுக்காகப் 'பார்ப்பான்' என்று திட்டுவது சிலரைக் கூசச்செய்தால், உங்களை வெறி ஏற்றினால் எதோ ஒரு மூலையில், மூளையில் அந்த சாதி வெறி இருப்பதாகத்தானே அர்த்தம்? சாதியே இல்லை என்று அங்கலாய்க்கும் சிலர் ஏன் சொந்த சாதியைத் திட்டினால் கோவம் வருகிறது?

திண்ணக்கூடாத ஒன்றைத் உண்ணுவதும், அடுத்தவர்களுக்கு அதை ஊட்ட நினைப்பதும் தவறுதானே?திண்ணும் பொழுது பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பது கூட அருவருப்பான விஷயம்தானே? ஏனென்றால் அதெல்லாம் பக்கத்தில் உட்கார்ந்து ரசிக்க முடிவதில்லை.